மகாகவி பாரதியாரின் உரைநடை வாரிசு என்று அறியப்பட்ட வ.ராமசாமியின் நினைவு தினம் இன்று… பாரதியாரின் ரசிகராக அறிமுகமாகி, அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த பெருமையை பெற்ற வ.ராவை அறிந்து கொள்வோம்.
தஞ்சை மாவட்டம் தந்த தமிழ்ப் பத்திரிகையாளர் இவர். இந்திய விடுதலை வேள்வியில், தனது எழுத்துகள் மூலம் சின்னச் சின்னச் சுள்ளிகளை இட்டுச் சேர்த்த விடுதலை வீரர். இந்தியர்களின் முன்னேற்றத்துக்கு மூட வழக்கங்களே முட்டுக்கட்டை என, தனது குல வழக்கங்களைக் கூண்டோடு துறந்தவர். அதற்காக அண்ணாவிடம் அக்ரகாரத்து அதிசய மனிதர் என்று வாழ்த்தும் பெற்றவர். மகாகவி பாரதியாரின் ரசிகராக அவருக்கு அறிமுகமாகி, சீடராக வளர்ந்து, நண்பராக உயர்ந்து, பாரதியார் வாழ்க்கையை ஆவணப்படுத்திய காவலராக திகழ்ந்தவர் – வ.ராமசாமி. இவர் எழுதிய மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு, பாரதியைப் பற்றி அறியாத பல தகவல்களைத் தமிழ்நாட்டுக்கு வழங்கியது.
அரவிந்தர், வ.வே.சு. ஐயர், காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்கள் பலரின் நெருங்கிய தோழராக இருந்த வ.ராமசாமி, பல பத்திரிகைகளில் ஆங்கிலேய அரசின் அச்சாரம் ஆட்டம் காணும் அளவிற்கு, விடுதலை வேட்கை பொங்கும் தலையங்கங்களை எழுதியவர். தேசிய சிந்தனையின் தீராத பற்றாளர் – வ.ராமசாமி.
தமிழ் இலக்கியத்துக்கும் ஈடில்லா பங்களிப்பை வழங்கியிருக்கும் வ.ராமசாமி, தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண்கல்வி போன்ற முற்போக்கு கருத்துகளைப் புதினங்கள் மூலமாக வலியுறுத்தினார். இவரது “மாயாவுக்குச் சவுக்கடி” என்ற நாவல், ஆங்கிலேயர்களால் கண்டனம் செய்யப்படும் அளவு, தீக்கனலாய் இருந்தது.
வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட காந்திய இயக்கங்கள் மூலம் கைதான இவர், சிறையில் இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக எழுதிய கட்டுரைகள், ஜெயில் டைரி என்ற புத்தகமானது. நாவல், சிறுகதை வாழ்க்கை வரலாறு என மொத்தம் 17 நூல்களை எழுதியுள்ளார். மணிக்கொடி இதழ் மூலம் மகத்தான எழுத்துப்பணிகளைச் செய்தார்.
பாரதியார் மகாகவியா என்று தமிழ்நாட்டில் ஒரு சர்ச்சை எழுந்தபோது, அவர் மகாகவிதான் என்று நிறுவி, தமிழ்நாடே மகாகவி பாரதி என்று உச்சரிக்க வைத்த வ.ராமசாமியின் 70வது நினைவு நாள் இன்று…