தமிழிசை இயக்கத்தின் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் நினைவு நாள் இன்று…

தமிழிசை இயக்கத்தை தொடங்கிய இசை ஆய்வாளரும், சிலப்பதிகாரத்தில் உள்ள இசை நுணுக்கங்களை தமிழ் உலகிற்கு கொண்டுவந்து துள்ளலிசையை அறிமுகப்படுத்தியவருமான ஆபிரகாம் பண்டிதரின் நினைவு நாளான இன்று, அவரின் வாழ்விசையோடு பயணிக்கலாம்…

“கண்ணகி அணி மணிக் கால் சிலம்பு உடைப்ப, மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே” என்று சிலப்பதிகாரத்தில் கண்ணகி வீசி எறிந்த சிலம்பின் மாணிக்கப் பரள்கள், பாண்டிய மன்னன் வாயில் தெறிக்கும் போது ஏற்படும் இசையை போல், தமிழ் மக்களுக்கு சங்கீதமே தெரியாதென்று வேடிக்கை கதை பேசியவர்களுக்கு துள்ளலிசையை கண்டுபிடித்து கொடுத்தவர்தான் ஆபிரகாம் பண்டிதர்.

1859 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி, அன்றைய திருநெல்வேலி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில் பிறந்த ஆபிரகாம் பண்டிதர், திண்டுக்கல்லில் சடையாண்டி பண்டிதரிடம் இசை பயின்ற பின், தஞ்சையில் ஒரு நாதஸ்வர வித்வானிடம் இசை கற்று தேர்ந்தார்.

கர்நாடக இசை மட்டுமே இசையின் வடிவம். தமிழ் மக்களுக்கு சங்கீதமே தெரியாது என்று சொன்ன காலத்தில், கர்நாடக இசை பிறந்ததே தமிழில் இருந்து தான் என்றும், சரிகமபதநி என்ற ஏழு ஸ்வரங்களின் பெயர்கள் தமிழ் மூலங்களையே கொண்டவை என்பதை தனது ‘கர்ணாமிர்த சாகரம்’ நூலின் மூலம் ஆபிரகாம் பண்டிதர் இசை உலகிற்கு இசைத்துக்காட்டினார்.

சிலப்பதிகார இசை சூத்திரங்களின் முடிச்சுகளை ஒவ்வொன்றாக எளிதில் அவிழ்த்து தமிழுலகுக்குக் காட்டிய பெருமை ஆபிரகாம் பண்டிதரை மட்டுமே சாரும்…

அதிக சுவை கொண்ட ராஜகரும்பு எனும் புதிய கரும்பு வகையை உருவாக்கி, ஆங்கிலேயர்கள் அளித்த ராவ்சாகேப் என்ற உயரிய விருதின் மூலம் ஆபிரகாம் பண்டிதர் தமிழர்களை தலை நிமிர்த்தினார் என்றாலும் மிகையல்ல.

தமிழ் ஆசிரியர், வானியல் ஆய்வாளர், சோதிடர், சித்த மருத்துவர், புத்தகப் பதிப்பாளர், அச்சக உரிமையாளர், புகைப்படக் கலைஞர், சிறந்த பாடலாசிரியர், இசைக்கருவி வடிவமைப்பாளர் என்று பண்டிதரின் பரிமாணம் இன்று வரை இசையில் தொடரும் பரிணாமம் எனலாம்…

வாழ்க்கையின் முதற்பகுதியை மருத்துவ ஆய்வுக்கும், இரண்டாம் பகுதியை இசை ஆய்வுக்கும் அர்ப்பணித்த ஆபிரகாம் பண்டிதர்,1918-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ம் நாள் தனது 59 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

இசையின் பரிபூரண வடிவத்தை எப்படி சொல்ல முடியும் என்பதைப் போல், தமிழ் இசையை பிறக்க வைத்த பண்டிதரின் வாழ்விசையை, இதற்குள் சொல்லிவிடவா முடியும்? ஆனாலும், அவரின் பேச்சு அவரோகணமானாலும், பண்டிதரின் இசை குறித்த ஆய்வு, உலகில் இசை உள்ளவரை ஆரோகணமாக ஸ்வரங்கள் பூப்படையட்டும்…

நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்திக்குழுவுடன் சாக்லா…

 

Exit mobile version