சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் காவல்துறையினர் பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொது இடங்களில் வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு , பட்டினப்பாக்கம், நீலாங்கரை உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்து சிலைகள் கரைக்கப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் ராட்சத கிரேன்கள், படகுகள், உயிர் காக்கும் குழுக்கள், நீச்சல் வீரர்கள், மருத்துவக் குழுக்கள், கடற்கரையில் சிலைகளை எளிதாக கொண்டு செல்வதற்கான வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடைசி கட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்று நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு பணிக்காக 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டினம்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருவது குறித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாலை 6 மணிக்குள் அனைத்து சிலைகளையும் கரைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.