இந்த ஆண்டின் முதல் சூரியகிரகணம் இன்று

இந்த ஆண்டிற்கான முழு சூரியகிரகணம் இன்று நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி இன்றிரவு 10.24 மணிக்கு இந்த கிரகணம் துவங்குகிறது.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும்போது கிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் ஒளிக்கதிர்களை சந்திரன் மறைக்கும் அரிய நிகழ்வே சூரிய கிரகணம். இந்த அரிய நிகழ்வு இன்று நிகழ்கிறது.

சிலி நாட்டின் லா செரீனா என்னும் இடத்தில் அந்நாட்டு நேரப்படி மதியம் 3.22 மணிக்கு துவங்கி, மாலை 5.46 மணி வரை இந்த கிரகணம் நீடிக்கிறது. சிலி, அர்ஜெண்டினா மற்றும் தென்பசிபிக் பெருங்கடல் அருகில் உள்ள பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை தெளிவாக காணமுடியும். இதனால் தெற்கு பசுபிக் நாடுகள் சில மணிநேரங்களுக்கு இருளில் மூழ்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மொத்தமாக 4 நிமிடங்கள் 33 வினாடிகளுக்கு மட்டுமே முழுமையான சூரிய கிரகணம் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சூரிய கிரகணம் இது.

இந்தியாவில் இரவு 10.24 மணிக்கு துவங்கும் சூரிய கிரகணம் நாளை அதிகாலை 2.14 மணிக்கு முழுமையடைகிறது. ஆனால் இரவாக இருப்பதால் வானில் நிகழும் இந்த அரிய நிகழ்வை இந்திய மக்களால் காண முடியாது. ஆனால் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சிகளின் வழியே கிரகணத்தை காண பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version