குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டவரும், சுதந்திரபோராட்ட வீரருமான மார்ஷல் நேசமணியார் குறித்த செய்திதொகுப்பை இப்போது பார்க்கலாம்.
தவறி விழுந்த கிச்சுணமூர்த்தியின் சுத்தியல் தலையில் விழுந்ததால் தரையில் விழுந்தார் நேசமணி சித்தப்பா..இது அண்மையில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் நெட்டிசன்களால் அறிமுகம் செய்யப்பட்ட பெயர்..
ஆனால், இன்றைய தினம் உண்மையான நேசமணியை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். யார் இந்த நேசமணி..ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்?
இன்றைய தமிழக வரைபடத்தில் கன்னியாகுமரி என்றொரு மாவட்டம் இணைந்திருக்க காரணமானவர்தான் இந்த நேசமணி. இந்திய விடுதலைக்குப் பின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடனிருந்த குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்கப் போராடி அதன் விளைவாகவே 1956 நவம்பர் 1ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. மேலும் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில், நாகர்கோயில் தொகுதியில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1895-ம் ஆண்டு ஜூன் 12 ம் தேதி அப்பாவு – ஞானம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர் பள்ளிப்படிப்பு முடித்த பின்பு, 1921ம் ஆண்டு சட்டப்படிப்பு முடித்து வழக்கறிஞராக பதிவு செய்தார்.
நீதிமன்ற ஏற்றத்தாழ்வுகளை களைந்தது , விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றது, குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைத்தது என தொடர்ந்து மக்கள் பணிக்காகவே வாழ்ந்தவர் நேசமணி. விடுபட்ட தமிழ்ப் பகுதிகளான செங்கோட்டை மேற்குப் பகுதி, தேவிக்குளம்-பீர்மேடு, நெய்யாற்றின்கரை மற்றும் சித்தூர் ஆகியவற்றைத் தமிழகத்துடன் இணைப்பதற்காகவும் நாடாளுமன்றத்தில் 3 நாட்கள் தன்னந்தனியாக நின்று போராடி முயற்சி செய்தார்.
30 ஆண்டுகால பொதுவாழ்வின் பலனாக மக்களால் குமரித்தந்தை என்று அழைக்கப்பட்ட நேசமணி,1968 ஜூன் 1ம் தேதி காலமானார். காலமாற்றத்தால் நாம் கடந்துவிட்டாலும் மறந்து விடக்கூடாத குமரித்தந்தை மார்ஷல் ஏ.நேசமணியின் பிறந்ததினம் இன்று…அவரைப் போற்றுவோம்.