இன்று உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்

100 ஆண்டுகால சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது குழந்தை தொழிலாளர் முறை. உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமான இன்று அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

எந்த நாட்டில் குழந்தைகளுக்கு கல்வி இல்லையோ அந்த நாட்டுக்கு, வளமான எதிர்காலம் வார்த்தையில் கூட அமையாது என்பதே வரலாறு கற்றுத் தந்த பாடம். ஆனால் குழந்தைகளை மழலைச்செல்வம் என்று அழைப்பதை தவறாகப் புரிந்துகொண்டார்களோ என்னவோ, ஆண்டுதோறும் இந்த பிரச்சினையின் வீரியம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உலகம் முழுவதும் இருக்கும் 1.95 பில்லியன் குழந்தைகளில் 218 மில்லியன் குழந்தைகள் அடிப்படைக் கல்வி மறுக்கப்பட்டு, வறுமை உள்ளிட்ட காரணங்களால் குழந்தை தொழிலாளர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதில் 152 மில்லியன் பேர் கட்டாயத் தொழிலாளர்களாகவும், 73 மில்லியன் பேர் அபாயகரமான தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றனர் என்பது வருத்தமளிக்கும் செய்தி..

சர்வதேச தொழிலாளர் அமைப்பு, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதியை குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளாக கடைபிடித்து வந்தது. கடந்த 2002ம் ஆண்டு முதல் ஐ.நா சபை அதிகாரப்பூர்வமாக இந்த நாளை ”உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளாக” அறிவித்தது.

2025ம் ஆண்டுக்குள் எல்லா குழந்தைகளுக்கும் கல்வியும், சமூக பாதுகாப்பும் வழங்கி குழந்தை தொழிலாளர்களற்ற சூழலை உருவாக்குவதே இந்த நாள் கடைபிடிக்கப்படுவதன் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற, ஒவ்வொரு ஆண்டும் ஒரு பொதுத்தலைப்பை மையமாகக்கொண்டு குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதைப்போலவே இந்த ஆண்டும் “குழந்தைகள் வேலை செய்யட்டும். களங்களில் அல்ல..கனவுகளில் ” என்ற பொதுதலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன….

1919ம் ஆண்டிலிருந்து இந்த குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கப்போராடி வரும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, இந்த 2019ம் ஆண்டோடு நூறாவது ஆண்டை எட்டுகிறது. குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, ஒரு நூற்றாண்டுகால பிரச்சினையாக உருவெடுத்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை..

Exit mobile version