பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு நாளான இன்று, மசூதி இடிக்கப்பட்டது முதல் உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரையிலான நிகழ்வுகள் குறித்து செய்தித் தொகுப்பாக காணலாம்…
உத்தரபிரேதச மாநிலம் அயோத்தியில், 1,528 ஆம் ஆண்டு முகலாய மன்னர் பாபரால் கட்டப்பட்டது இந்த மசூதி. 1949 ஆம் ஆண்டு மசூதிக்குள் ராமர் சிலை வைக்கப்பட்டதால் பிரச்னை வெடித்தது.
இதனையடுத்து, பாபர் மசூதியை மூடுவதற்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் 30 ஆண்டுகளாக நடந்து வந்தபோது, 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதியன்று கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, நிலத்தின் மீதான உரிமையை ஒரு வழக்காகவும், பாபர் மசூதி இடிப்பு வேறொரு வழக்காகவும் நடைபெற்று வந்தது. 2010-ம் ஆண்டு நில உரிமை தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, பாபர் மசூதி அமைந்துள்ள நிலத்தில் மூன்றில் இரண்டு பகுதி நிலத்தை ராமர் கோவில் கட்டவும், மீதமுள்ள ஒரு பகுதி நிலத்தை இஸ்லாமியர்களிடம் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, இரு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தால் பாபர் மசூதி தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லாததால், இந்து மத நம்பிக்கையின் அடிப்படையில் கோயில் கட்ட அனுமதிக்கப்படுவதாக தீர்ப்பளித்தது.
இந்திய அரசு இன்றளவும் தீர்மானித்தும், வழிநடத்தும், முக்கிய அரசியல் நிகழ்வான பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று… இதே தேதியில்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சட்டமேதை அம்பேத்காரும் காலமானார் என்பதும் கவலைக்குரிய ஒற்றுமை…
நியூஸ் ஜெ செய்திகளுக்காக சாக்லா…