பன்முகத் தன்மை கொண்ட அப்துல் கலாமின் 88 வது பிறந்த தினம் இன்று

தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்து, இந்தியாவின் அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் என பன்முகத் தன்மை கொண்டவராக விளங்கிய அப்துல் கலாமின் 88 வது பிறந்த தினம் இன்று. 

1930 அக்டோபர் 15ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல்கலாம், அங்குள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்தார். படிக்கும் போதே தன்னுடைய சகோதரருக்கு உதவியாக பகுதி நேரத்தில் செய்தித்தாள்கள் விநியோகம் செய்தார். பள்ளிப்படிப்பிற்கு பிறகு, திருச்சி “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” 1954ஆம் ஆண்டு இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். இவரது ஆர்வம் விண்வெளி பக்கம் திரும்பியதால், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

1960 ஆம் ஆண்டு -DRDO ல் தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது.

1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றினார். இதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய பெருமை கலாம், அவர்களையே சாரும். இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ள கலாம், இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் தந்தையாகவும் போற்றப்படுகிறார்.

2002 ஆம் ஆண்டு இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருதை” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. இது வரை பதவி வகித்த அரசியல் தலைவர்களில் மாணவர்களை அதிகமாக சந்தித்து உரையாடிய பெருமை அப்துல் கலாமையே சாரும்.

கலாம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் தாய் மொழியான தமிழை விட்டு கொடுத்தது கிடையாது. அதற்கு உதாரணமாக ஐரோப்பா பாராளுமன்றத்தில் பேசிய போது கனியன் பூங்குன்றனாரின், யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று வரிகளைப் பேசி அரங்கத்தை அதிர வைத்தவர் …

 

2015 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள், தனது 84 வது வயதில் மேகாலயா மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்..

நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்விக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். அந்த அக்னியை கொழுந்துவிட வைத்து, அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதே நமது கடமை. இது காலாமின் வார்த்தைகள்..

அவர் ஏற்றிய அந்த அக்னி தீ இன்றும் இந்திய இளைஞர்களிடையே நம்பிக்கை ஒளியினை பரப்புகிறது என்பதுதான் மறக்கமுடியாத உண்மை…

Exit mobile version