40 வருடங்களாக இசை விருந்து படைத்து வரும் சின்னக்குயில் சித்ராவின் 57-வது பிறந்தநாள் இன்று!

ஆறு தேசிய விருதுகள், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகள் என 40 வருடங்களுக்கும் மேலாக தன் குரலால் இசை அர்ச்சனை நடத்திக்கொண்டிருக்கும் சின்னக்குயில் சித்ராவின் 57 வது பிறந்தநாள் இன்று.  1963 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த சித்ரா 1979 ஆம் ஆண்டு முதலே மலையாளத்தில் பாடத் துவங்கினார். “பூவே பூச்சுடவா” படம் மூலமாக சித்ராவை தமிழுக்கு அழைத்து வந்தார் இளையராஜா. “பூஜைக்கேத்த பூவிது” பாடல் பாடும் தமிழில் சித்ராவுக்கு மிகச்சிறந்த அறிமுகம் கிடைத்தது.  “நானொரு சிந்து காவடி சிந்து” பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருது பெற்றார் சித்ரா. அப்போது அவருக்கு வயது 21. ஒட்டுமொத்தமாக ஆறுமுறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். வேறந்த பெண் பாடகியும் இத்தனை முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதுகளை வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்ம ஸ்ரீ, கலைமாமணி, 6 தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகளைப் பெற்ற ஒரே பாடகி, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டவர், சீனாவிம் த்சிங்காய் இசை விழாவில் கௌரவிக்கப்பட்ட ஒரே இந்தியப் பாடகி என்ற பெருமைக்குரியவர் இந்த சின்னக்குயில் சித்ரா.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள சித்ரா, கிருஷ்ணா டிஜிடிசைன் என்ற பாடல்பதிவுக் கூடம் ஒன்றை சென்னையில் நிறுவி நடத்தி வருகிறார். தமிழகத்தில் சின்னக்குயில், கேரளாவின் வானம்பாடி, கர்நாடகத்தில் “கன்னட கோகிலே” ஆந்திராவில் ” சங்கீத சரஸ்வதி” இந்திய சினிமாவின் மெலடி குயீன்… என்று கொண்டாடப்படும் சித்ராவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Exit mobile version