இன்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் 53-வது பிறந்த நாள்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் 53-வது பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தவண்ணம் உள்ளனர்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் ஷாருக்கான். கிங் ஆப் பாலிவுட் மற்றும் பாலிவுட் பாட்ஷா என்ற செல்ல பெயர்களும் இவருக்குண்டு.

கடந்த 1965-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியில் பிறந்த ஷாருக்கான், 1980களின் இறுதியில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கினார்.தொடர்ந்து 1992-ல் தீவானா என்ற பாலிவுட் படத்தில் அறிமுகமானார். ஆரம்பத்தில் இவர் வில்லனாக நடித்த பாசிகர் உள்ளிட்ட படங்கள் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.

தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் என்ற அளவிற்கு இவர் உயர்ந்தார். தன்னுடைய 25 வருட திரைப்பயணத்தில் இதுவரை 80 படங்களில் இவர் நடித்துள்ளார். இதுவரை 14 பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ள ஷாருக், கடந்த 2005ல் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.

பாசிகர், தேவதாஸ், டான், சென்னை எக்ஸ்பிரஸ், தில்வாலே துல்ஹானியா லே ஜாயிங்கே உள்ளிட்ட ஷாருக்கானின் படங்கள் ரசிகர்களால் தற்பொழுதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவருடைய கன்னக்குழி இவருக்கு சிறப்பான தோற்றத்தை வழங்குவதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஷாருக்கான் விளங்குகிறார். மேலும் கொல்கத்தா ஐ.பி.எல் அணியை இவர் வாங்கியுள்ளார். இவருக்கு கவுரி கான் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.ஜீரோ உள்ளிட்ட இரண்டு படங்களில் தற்பொழுது ஷாருக் நடித்து வருகிறார்.

ஷாருக்கின் 53-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்கூற மும்பை மன்னாட் பகுதியில் உள்ள இவரது வீட்டின் முன்பு நேற்று நள்ளிரவில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடினர். இதையடுத்து தனது பால்கனியில் தோன்றி அவர்களது வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் ஷாருக்கின் பிறந்தநாளையொட்டி பாலிவுட் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version