சாகாவரம் பெற்ற சார்லி சாப்ளின் – 43வது நினைவு தினம் இன்று!

நகைச்சுவை என்றாலே நினைவுக்கு வரும் முதல் பெயர் சார்லி சாப்ளின். அவர் மறைந்து இன்றோடு 43 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் கூட அவரது நகைச்சுவைக்கு வயதாகவில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.. நகைச்சுவை வானின் துருவ நட்சத்திரமான சாப்ளினின் சாதனைகளை அவது நினைவு நாளில் மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம்..

வாழ்க்கை ஒவ்வொரு முறை காயப்படுத்திய போதும், தன் புன்னகையால் அதனை வென்று காட்டிய சாப்ளின், 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம்தேதி லண்டனில் பிறந்தார். சிறு வயதில் இருந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சாப்ளின், அமெரிக்கா சென்றதும், மெக்சன்னட்டின் நாடகக்குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடிக்க துவங்கினார்.

1914-ம் ஆண்டு சாப்ளின் நடித்த நாடோடி கதாபாத்திரமான THE TRUMP என்ற திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 25 ஆண்டுகள் பல்வேறு படங்கள் மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்த அவர் உலகிலேயே முதன் முதலில் 1 மில்லியன் டாலர் சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

சிறிய மீசை, கிழிந்த கோட்டு, தலைக்குப் பொருந்தாத தொப்பி, வித்தியாசமான நடை, வலிகளை மறக்க வைக்கும் புன்னகை என தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட சாப்ளின், நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாசிரியர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக திகழ்ந்தார்.

பேசும் சினிமா வந்ததும் நடிப்புக்கலை செத்து விட்டது என்பது சாப்ளினின் கருத்து ஆகவே, முதல்பேசும் படம் வெளியானது முதல் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் சாப்ளின். பிறகு நீண்ட நட்களுக்கு பிறகு 1940-ம் ஆண்டு, உலக சர்வாதிகாரியாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஹிட்லரை விமர்சித்து சாப்ளின் தனது முதல் பேசும் படமான ’தி கிரேட் டிக்டேட்டர்’ திரைப்படத்தை வெளியிட்டார்.

இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து சுவிட்சர்லாந்தில் 1977-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி, தனது 88 வயதில் சாப்ளின் காலமானார். தனது வலிகளைப் புன்னகையாக மாற்றி, சந்தோஷத்தை மட்டுமே நமக்கு கொடுத்த சார்லி சாப்ளின், உலகில், கடைசி மனிதனின் முகத்தில் சிரிப்பு இருக்கும் வரை, அதில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

 

 

Exit mobile version