இன்று 2வது டி20 கிரிக்கெட் போட்டி”: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. இதனையடுத்து நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்த வரையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. கடந்த போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சுமித் மற்றும் மெக்ஸ்வெல் ஆகியோர் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக திகழும் ரவீந்திர ஜடேஜா, காயம் காரணமாக விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1:40 மணிக்கு தொடங்குகிறது.

Exit mobile version