இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் நாள், தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. அதை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசானது கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருதிட்டத்தினை கொண்டு வந்தது , அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 ஆம் தேதி தேசிய வாக்களர் தினமாக கடைபிடிக்க வேண்டும் என இந்திய அரசு அறிவுருத்தியது. இதன் முக்கிய நோக்கம் வாக்காளர் பதிவை அதிகப்படுத்தி, வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வாக்காளர்களுக்கு உணர்துவதேயாகும்.
வாக்குரிமை அவ்வளவு எளிதில் நமக்கு கிடைக்கவில்லை, இந்த உரிமையை நமக்கு வாங்கி தருவதற்க்காக அன்றைய பெண்கள் பல நீண்ட நெடிய போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.
ஆம் நாகரிகத்தின் தொட்டிலான பண்டைய கிரேக்கத்தில் கி.மு., ஐந்தாம் நூற்றாண்டில் நடந்த தேர்தல்களில் பெண்கள், அடிமைகள் மற்றும் வெளிநாட்டினர் ஓட்டளிக்க முடியாது என்ற விதியிருந்தது. 1837 ஆண்டு விக்டோரியா மகாராணியாக ஒருபெண் 18 வயதில் பொறுப்பேற்று 64 ஆண்டு காலம் ஆட்சி செய்தாலும், உலகம் முழுவதும் ஆண்களுக்கு சமமாக ஓட்டளிக்கும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. இங்கிலாந்து நாட்டில் பெண்கள் ஓட்டளிக்க அனுமதி வழங்கும் மசோதா 1870ம் ஆண்டு தாக்கலானது.
48 ஆண்டுகளுக்கு பிறகு 1918 ஆண்டில் தான் சொத்துக்கள் உள்ள 30 வயதிற்குட்பட்ட பெண்கள் மட்டும் ஓட்டளிக்க உரிமையளிக்கப்பட்டது. பின் 21 வயதிற்கு மேற்பட்ட அனைத்து பெண்களுக்கும் ஓட்டளிக்கும் உரிமை 1928 ஆண்டில் வழங்கப்பட்டது.
இந்தியாவில் அன்னிபெசன்ட் அம்மையார் போன்றோர் 1917 ஆண்டில் பெண்களின் ஓட்டுரிமைக் காக போராடிய போது, இந்திய பெண்கள் ஓட்டளிக்க தயாராக இல்லை என ஆட்சியாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். எனினும் 1920–21 ஆண்டுகளில் திருவாங்கூர், கொச்சின், சென்னை, மும்பையில் பெண்களுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடைத்தது. 1926 ஆண்டு இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முதல் எம்.எல்.ஏ., ஆக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
இவ்வளவு நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகுதான் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது என்பது மறக்க முடியாத உண்மையாகும்.தேசிய வாக்களர் தினமான இன்று இதனை நாம் நினைவூ கூறுவோம்.