இன்று சர்வதேச புலிகள் தினம் – புலிகள் வனங்களின் ஆதாரம்!

அழிந்து வரும் புலி இனத்தை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வனங்களின் முக்கிய ஆதாரமாக விளங்கும் புலிகளை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…

 

மிடுக்காக சுற்றித் திரியும் புலிகள் தான் அழகிய வனங்களின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. உணவு சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் புலிகளின் எச்சங்கள் தான் பூஞ்சை காளான்களை உருவாக்கி பல்லுயிர் பெருக்கத்திற்கு வழி வகுக்கின்றன.

ஒரு வனப்பகுதியில் உள்ள புலிகளின் எண்ணிக்கையே அந்த வனத்தின் வளம் குறித்து எடுத்துரைப்பதாக வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வனத்தின் வளம் பெருக அடிப்படை ஆதாரமாக உள்ள இந்த புலிகளின் எண்ணிக்கை, இந்தியாவில் 2000-மாவது ஆண்டில் வெறும் 1700 என்ற நிலையில் இருந்தது. அவற்றின் தோலுக்காக புலிகள் வேட்டையாடப்பட்டதே எண்ணிக்கை வெகுகாக குறையா காரணம். இதனை அடுத்து மத்திய, மாநில அரசுகள் சுதாரித்து, தேசிய விலங்கான புலிகளை காத்து அதன் எண்ணிக்கையை பெருக்க பல்வேறு முயற்சிகளை எடுத்தது.

அதன் விளைவாக இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை தற்போது 2,226-ஆக அதிகரித்துள்ளது. இது உலக அளவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் ஆகும். குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தற்போது 200 புலிகளுக்கும் மேல் உள்ளது.

ஒரு புலியின் சராசரி ஆயுள் 11 ஆண்டு. பெண் புலியின் பேறுகாலம் 105 முதல் 113 நாட்கள். இவை ஒரே பிரசவத்தில் மூன்று அல்லது நான்கு குட்டிகளை ஈன்றெடுக்கும். அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்ததால் புலிகளின் எண்ணிக்கை தற்போது உயர்ந்த போதும், ஆங்காங்கே புலிகளை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர் என்பது உள்ளிட்ட செய்திகள் வந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது

நாம் வாழ நீரும், சுத்தமான காற்றும் வேண்டும். இந்த இரண்டும் கிடைக்க வனம் வேண்டும். வனம் பெருக புலிகள் வேண்டும். நாம் வாழ வேண்டுமெனில் புலிகளும் வாழ வேண்டும் என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் புலிகள் தினத்தை வரவேற்போம்..

Exit mobile version