”கோலிவுட் லிட்டில் ஸ்டார்”-நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று

குழந்தை நட்சத்திரம் முதல் மாஸ் ஹீரோ வரை, தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் சிம்புவின் பிறந்தநாள் இன்று. அவரது திரை பயணத்தின் ஏற்ற இறக்கங்களை இப்போது பார்க்கலாம்.

தமிழ் திரையுலகின் பன்முக கலைஞரான டி. ராஜேந்திரனின் மகனாக, 1983ம் ஆண்டு பிறந்த சிலம்பரசன் 1995ல் ‘உறவை காத்த கிளி’ படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் தடம் பதித்தார்.2002ல் வெளியான ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம், ஹீரோவாகவும் தனது விரல் வித்தைகளை காட்டத் தொடங்கினார் அவர்.

நட்சத்திரத்தின் வாரிசாக இருந்ததால் ஆரம்பக் காலத்தில் எளிதாக வாய்ப்புகள் கிடைத்தன. ஆனாலும் தொடர்ச்சியாக சிம்புவின் படங்கள் சந்தித்த தோல்விகள், அவரது திரை பயணத்தை கேள்விக்குள்ளாக்கின.

திறமைகளுக்கு குறையில்லாத சிம்பு, தனக்கான பாதையை கண்டறிய முடியாமல், தடுமாறினார். அது சிம்புவிற்கு தோல்விகளை மட்டும் பரிசளிக்காமல், அவரை சுற்றிய பல சர்ச்சைகளுக்கும் வித்திட்டன.

வித்தைகள் மட்டும் காட்டத் தெரிந்த சிம்புவின் விரல்கள், முதன் முறையாக ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் மெளனங்களை படரவிட்டன.

மாறாக அங்கே அவரது விரல்களுக்குப் பதிலாக, எழுத்தால் கெளதம் வாசுதேவ்வும், இசையால் ஏ.ஆர். ரஹ்மானும் தங்களது விரல்களில் சுடரேற்றி, சிம்புவிற்கு விண்ணைத் தொடும் வெற்றியைக் கொடுத்தனர்.

ஆனாலும், சிம்புவின் சில தவறான கதைத் தேர்வுகளும், அவரை சுற்றி பின்னப்பட்ட சிலந்தி வலைகளும், மீண்டும் அவரது திரைப்பயணத்தை ஐயத்துக்குள்ளாக்கின.

தொடர்ந்து தன் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சினைகளின் வழியே, பலம் பொருந்திய ஆத்மனாக மீண்டு வரும் சூட்சமத்தை சிம்பு அறிந்திருந்தார். அதுவே சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு ஆகியோரின் ‘மாநாடு’ படம் மூலம், சிம்புவிற்கு புத்துயிர் அளித்துள்ளது.

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் ‘பத்து தல’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. சிறுவயது முதல் நடித்து வரும் சிம்பு, தற்போது ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்து தல’, ‘கொரோனா குமார்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தெளிவான அரசியல், தேர்ந்த நடிப்பு என, மாநாடு படத்தின் மூலம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொண்ட சிம்பு, இன்னும் பல சாதனைகள் படைத்திட அவரது பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கிறது நியூஸ் ஜெ.

 

Exit mobile version