"நீரலையில் நீந்தவைத்த ஆழிப்பேரலை" – 10,000 உயிர்களை பலி கொண்ட நாள்

உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இன்றும் பேசப்படும் 2004 ஆம் ஆண்டு, சுனாமியின் நினைவு தினம் இன்று.. 

இந்தியப் பெருங்கடல் அன்று காலை ஆர்ப்பரிக்கும் என்று தெரியாமல்தான் கிழக்கில் சூரியன் உதித்தது. 2004 ஆம் ஆண்டின் டிசம்பர் 26 ஆம் தேதி, பலருக்கும் மறக்க முடியாத நாளாகும் என்பதும் தெரியாமல்தான், நாட்குறிப்பு கிழிக்கப்பட்டது.

எப்போதும், எல்லாவற்றை வாங்கிக் கொள்ளும் பொறுமைசாலியாகவே பார்க்கப்பட்ட வங்காள விரிகுடா, கோபம் கொண்டு கொந்தளித்து தண்ணீரை நிலப்பரப்புக்குள் உமிழ்ந்து, உயிர்களைக் கொண்டு வெறியாறியது.

2004 ஆம் ஆண்டு, இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள கடல்பகுதியில், வரலாறு காணாத நில நடுக்கம் பதிவானது. அதன் அதிர்வலையை ரிக்டர் புள்ளிகளும் நடுக்கத்துடன் தான் பதிவு செய்து வைத்துள்ளது.

கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலத்தின் அதிர்வு, கடலுக்கு மேல் பேரலையாகக் கிளம்பியது. சுமார் 100 அடிக்கு அலை எழுந்த கடலின், கோரத் தாண்டவத்தை நிலம் இன்னும் நினைவில் கொண்டுள்ளது.

குறிப்பாக தமிழ்நாட்டில், ஊருக்குள் கடலலை வந்துபோன பின்பும், மக்கள் கண்ணீரின் வெள்ளம் பல நாட்கள் தெருக்களில் சலசலத்தது. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை ஆக, கடற்கரைக்கு வாக்கிங் போனவர்முதல், வாழ்வுக்குப் போனவர்கள் வரை அனைவரையும் வாரிக்கொண்டு போனது கடல்.

குமரி, நாகை, வேளாங்கண்ணி, கடலூர், புதுவை அழியா ஆழ்துயரை விதைத்தது கடல். தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

கோடிக்கணக்கான பொருள்கள், இயற்கை வளங்கள், மரங்கள், கால்நடைகள் என இழப்பின் கணக்குகளை சொல்ல காகிதங்கள் கனக்கும். அந்தப் பேரலை நாளின் நினைவு வந்தால், இன்றும் நீரலையில் நனையாத கண்கள் கிடையாது.

ஆழிப் பேரலை எட்டிப் பார்த்து 16 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இயற்கையைக் காக்க வேண்டிய அவசியத்தை கடல் சொன்ன பாடமாய்க் கற்று கொண்ட நாம் எச்சரிக்கையோடு இருக்கிறோம்! நினைவில் சுமந்தே கடக்கிறோம்! வாழ்கிறோம்!

Exit mobile version