ரயில்வே துறைக்கு பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் மூலம் வரும் வருவாய் நடப்பு நிதியாண்டில் குறைந்துள்ளது.
அதில், பயணிகள் கட்டண வருவாய் 155 கோடி ரூபாயும், சரக்கு கட்டணம் வருவாய் 3,901 கோடியும் குறைந்துள்ளது. ஏப்ரல் – ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பயணிகள் கட்டண வருவாய் 13, 398 கோடியாக இருந்தது.
இது ஜூலை-செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டில் 13, 243 கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த நிகழாண்டைவிட 155 கோடி ரூபாய் குறைவாகும்.
பயணிகளுக்கும் வியாபாரிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் குறைந்ததால் அவர்கள் ரயில் பயணத்தை தவிர்ப்பதே, இந்த வருவாய் இழப்புக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வருவாயை விட, செலவு அதிகரித்துவிட்டதால், இந்த நிகழாண்டில் ரயில்வேதுறையின் மொத்த வருவாயில் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் வருவாயில் பெரும்பங்காற்றும் ரயில்வே துறையின் வருவாயை மீட்டெடுக்க, சரக்கு மற்றும் பயணிகள் கட்டணத்தில் சலுகைகள் அளித்து, சேவையை அதிகரிக்கவேண்டும் என்று ரயில்வேதுறை மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.