மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரத்து 993 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக, கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 900 கனஅடியாக இருந்தநிலையில், இன்று காலை 5 ஆயிரத்து 993 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும், கிழக்கு ,மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடகப் பகுதிகளில் மழை அளவு குறைந்ததையடுத்து தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5 ஆயிரத்து 700 கனஅடியாக குறைந்துள்ளது. வெள்ளப்பெருக்கின் போது அருவியில் ஏற்பட்ட சேதங்கள் இன்னும் சீரமைக்காத நிலையிலேயே உள்ளதால், அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை 124வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version