சிபிஐயின் புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக்குழு வரும் 24ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.
சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. இதை எதிர்த்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் கட்டாய விடுப்பை ரத்து செய்தது. இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் சிபிஐ இயக்குநராக பதவியேற்றார். ஆனால் அவரை அப்பதவியில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான உயர்நிலைக் குழு பதவி நீக்கம் செய்தது.
இதேபோல சிறப்பு இயக்குநரும் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.இதைதொடர்ந்து சிபிஐக்கு புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் அடங்கிய உயர்நிலைக் குழு டெல்லியில் நாளை கூடுகிறது.இதில் சிபிஐயின் புதிய இயக்குநர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சிபிஐ இயக்குநர் பதவிக்கு மொத்தம் 17 அதிகாரிகளின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், இறுதிப் பட்டியலில் 4 அதிகாரிகளின் பெயர்கள் உள்ளன.