கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் 158 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரியத்திற்கு 122 கோடியும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 36 கோடியும் ஒதுக்கப்பட்டது. நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் சீரான குடிநீர் வழங்கப்படுவதை அரசு அதிகாரிகள்,உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும் எனவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். அதேபோல் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் மற்றும் பழுதுபார்த்தல், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுதல் போன்ற பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.