இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த தினமான “மீலாதுன் நபி” திருநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மற்றும் ஆளுநர் இஸ்லாமிய பெரு மக்களுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்…
இது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தனது உளமார்ந்த “மீலாதுன் நபி” நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், இஸ்லாமிய பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோரும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தல், மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டம், மற்றும் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 1,500 ரூபாயாக உயர்த்தியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதே போல தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், முகமது நபியின் பிறந்தநாளான மீலாதுன் நபி திருநாளில் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.