கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகரை கர்நாடக ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் தனது அரசு மீது நம்பிக்கை கோரி பேசிய முதலமைச்சர் குமாரசாமி, ராஜினாமா செய்த எம் எல் ஏக்கள் சுயமரியாதை இல்லாதவர்கள் என்றும் கர்நாடகாவில் நடப்பதை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும், எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை உடனே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் கூறினார்.
இந்த நிலையில், சட்டசபையில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்னர், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்பதால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் ஆளும் கூட்டணியினர் நேரத்தை வீணடிப்பதாக பாஜகவினர் ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கர்நாடக சட்டப்பேரவையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தினார். இதையடுத்து சட்டப்பேரவையில் ஆளும் கட்சி எதிர் கட்சிக்கிடையே அமளி ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அமளியை காரணம் தெரிவித்து சபாநாயகர் கர்நாடக சட்டப்பேரவையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
நாளை காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.