நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சி இறங்கியுள்ளது. இதற்காக அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்டோரை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்த சந்திரபாபு நாயுடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் சந்திப்பு நடைபெற்றதாக கூறினார். மாநிலங்களின் உரிமைகள் மோடியின் ஆட்சியில் முழுமையாக பறிப்பதாக கூறிய அவர், இதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களிலும் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைத்து, பாஜக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.