அவதூறு வழக்கு விசாரணைக்காக வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தரவரிசை பட்டியல், மாநகராட்சி ஒப்பந்தங்கள், குடியுரிமை சட்டத்திருத்தம் உள்ளிட்டவை தொடர்பான அவதூறு செய்தி முரசொலி நாளிதழில் கடந்த செப்டம்பர் 4, டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வெளியானது.
இந்த செய்திகளை தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் மீது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஸ்டாலின் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதுடன், ஏப்ரல் 8 ஆம் தேதி ஸ்டாலின் அங்கு ஆஜராக உத்தரவிட்டார்.