குரூப்4, குரூப்2ஏ தேர்வுகளில் முறைகேடு தொடர்பாக 3 தேர்வர்கள் மற்றும் 2 இடைத்தரகர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட தேர்வர்களிடம் நடத்திய விசாரணையில், இடைத்தரகர் முகப்பேர் ஜெயக்குமார், காவலர் சித்தாண்டி ஆகியோரிடம் 5 லட்சம் முதல் 15 லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்து தேர்வானது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, முகப்பேர் ஜெயக்குமார், சித்தாண்டி ஆகியோரின் வங்கிகணக்குகள் முடக்கப்பட்டன.
இதனிடையே, நேற்று கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் 3 தேர்வர்கள் மற்றும் 2 இடைத்தரகர்களிடம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, ஓஎம்ஆர் சீட்டுகளை முகப்பேர் ஜெயக்குமார் போலி பேனாக்களை கொண்டு திருத்தியது தடயவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.