நேர்மையான நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளதாக எழுந்த புகாருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றதாகவும், இதில் 497 விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை வட்டங்களில் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய விண்ணப்பதார்களின் விவரங்ளையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட இதர மாவட்டத்தைச் சேர்ந்த 40 விண்ணப்பதாரர்களும் சென்னை முதல் கன்னியாகுமரி வர பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளது. இதேபோல், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த 57 விண்ணப்பதாரர்கள் தனித்தனி மையங்களில் தேர்வு எழுதியுள்ளதாக தெரிவித்துள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம், இவர்களில் யாரும் ஒரே அறையில் இருந்தோ, ஒரே தேர்வு மையத்தில் இருந்தோ தேர்வு செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை அறிவிக்கப்படும் என்றும், விசாரணையில் தவறு கண்டறியப்பட்டால் காரணமான நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.