டிஎன்பிஎஸ்சி முறைகேடு : மேலும் 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட 2 பேரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அதில் தொடர்புடைய அதிகாரிகள் என இதுவரை 12 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து முறைகேடு தொடர்பாக உளுந்தூர்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் மற்றும் பண்ருட்டியை சேர்ந்த சிவராஜ் ஆகிய இருவரை சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இடைத்தரகர்களுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரும் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட இருவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை அடுத்து விக்னேஷ் மற்றும் சிவராஜ் ஆகிய இருவரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறைகேடு தொடர்பாக இதுவரை மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version