டிஎன்பிஎஸ்சி முறைகேடு: 3 பேருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்

 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு தொடர்பாக, நேற்று கைது செய்யப்பட்ட மூவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் அதில் தொடர்புடைய அதிகாரிகள் என இதுவரை 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முறைகேட்டில் தொடர்புடைய ராணிப்பேட்டை மாவட்டம் வேடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், மற்றும் கடலூர் மாவட்டம் சிறுகிராமம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிபதி குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி காவல்துறையினர் எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நாகராஜ் முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து மூவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டார்.

நீதிபதியின் உத்தரவை அடுத்து கார்த்திக், வினோத்குமார் மற்றும் சீனிவாசன் ஆகிய மூவரும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version