தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை என அரசு அறிவித்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் 50 பேரும், இறுதி ஊர்வலங்களில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டிற்குள் இயங்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை என்றும், வழக்கமான பூஜைகளை தல ஊழியர்களை கொண்டு நடத்துவதற்கு தடை இல்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களை 50 நபர்களுடன் நடத்தலாம் என்ற முந்தைய அனுமதி ரத்து செய்யப்பட்டு, பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் குடமுழுக்கு நடத்திக்கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்ச்சிகளை 50 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களை 25 பேருக்கு மிகாமலும் நடத்திக்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களில் குறைந்தபட்சமாக 50 சதவிகித ஊழியர்கள் வீட்டிலிருந்தே கண்டிப்பாக பணியாற்ற வேண்டுமென்றும், கோல்ஃப், டென்னிஸ் கிளப் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி தவிர்த்து ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரும் நபர்கள், இ-பதிவு விபரங்களை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவர் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.

அதேபோல வெளிநாடுகளில் இருந்து கப்பல் மற்றும் விமானங்களில் தமிழ்நாட்டிற்கு வருவோருக்கும் இ-பதிவு கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

Exit mobile version