"சோதனைகள் நிறைந்த வேதனையான பட்ஜெட்" – ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

திமுக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, சோதனைகள் நிறைந்த வேதனையான பட்ஜெட் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 500க்கும் அதிகமான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சியமைத்த திமுகவின் நிதிநிலை அறிக்கை மக்களை விரக்தியை நோக்கி அழைத்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிதிநிலை அறிக்கையையும், தேர்தல் வாக்குறுதிகளையும் ஒப்பிட்டால், ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்காக, திமுக மக்களை வஞ்சித்துள்ளது தெளிவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துவிட்டு தற்போது அவர்களுக்கு இயல்பாக வழங்கவேண்டிய அகவிலைப் படியை உயர்த்தாதது ஏமாற்றமளிப்பதாகக் கூறியுள்ளார்.

பெட்ரோல் விலை 5 ரூபாயும், டீசல் விலை 4 ரூபாயும் குறைப்பதாக அறிவித்துவிட்டு, பெட்ரோல் விலையை 3 ரூபாய் மட்டும் குறைத்துவிட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் டீசல் விலையை குறைக்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

அதிமுகவின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஒப்பிடும்போது, திமுக நிதிநிலை அறிக்கையில் வருவாய் குறைந்து இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஏழை,எளிய மக்கள் எதிர்பார்த்த்த அளவுக்கு இந்த பட்ஜெட் அமையவில்லை என்றும், சுருக்கமாகச் சொன்னால், சோதனைகள் நிறைந்த வேதனையான பட்ஜெட் எனவும் விமர்சித்துள்ளார்.

 

Exit mobile version