தீபாவளி பண்டிகையையொட்டி திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுவதாக தி.நகர் துணை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை துவங்க இன்னும் 2 நாட்களே உள்ளதால், பொருட்கள் வாங்க கடைகளுக்கு மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். சென்னையின் முக்கிய வணிக பகுதியான தி.நகரில், புத்தாடைகள், நகைகள், இனிப்புகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருகின்னறர். இதனால் தி.நகரில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
ஜவுளிக்கடைகள் அதிகமாக இருக்கும், ரங்கநாதன் தெருவில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், திருட்டு போன்ற அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தியாகராய நகருக்கு வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பாதுகாப்பு குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். தி.நகர் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
வண்ணாரப்பேட்டை, ராயபுரம், பாரிமுனை, வேளச்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.