எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை

9 மாத ஆட்சி காலத்திலேயே மக்களின் எதிர்ப்பை திமுக அரசு பெற்றுவிட்டதாகவும், இது ஸ்டாலின் ஆட்சியின் சரிவு என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். 

தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிடும் அண்ணா திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும், அதனால் பயனடைந்தவர்களின் விவரங்கள் குறித்தும் பட்டியலிட்டார்.

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, 525 வாக்குறுதிகளை வெளியிட்ட ஸ்டாலின், அதில் 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக பொய் சொல்கிறார் என்று விமர்சித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக தேர்தல் நேரத்தில் கூறிய திமுக தான் தற்போது அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆதரவு கேட்பதாக தெரிவித்தார்.

அரசியல் வாழ்க்கையில் நற்பெயர் பெறுவது மிக முக்கியம் என்று தெரிவித்த அவர், அரசியலில் முளைக்கும் போதே உதயநிதி ஸ்டாலின் பொய்யுடன் முளைத்திருப்பதாக விமர்சித்தார்.

பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்த திமுகவினர், தற்போது வாக்கு சேகரிக்க மக்களை சந்திக்க முடியாமல் தவிப்பதாக கூறிய எதிர்க்கட்சி தலைவர், மக்களிடம் நெஞ்சை நிமிர்த்தி அதிமுகவினரால் வாக்கு கேட்க முடியும் என்று பெருமிதம் தெரிவித்தார்

Exit mobile version