"தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது" – தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என திட்டவட்டமாக தன் வாதத்தை முன்வைத்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை மீண்டும் ஏற்படும் என்றும், தூத்துக்குடியில் மீண்டும் மோதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதை தமிழக அரசு விரும்பவில்லை என்றும் வாதிட்டார்.

இதை கேட்ட தலைமை நீதிபதி, ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே என வினவினர்.

அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், ஆலையை அரசு நடத்தினாலும், தூத்துக்குடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தற்போதும் தொடர்கிறது என குறிப்பிட்டார்.

சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார்.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே, பிரமாணப் பத்திரத்தை வரும் திங்களன்று தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version