நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் நாளை முதல் தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்,
3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை முதல் வேலைக்கு வராத அரசு ஊழியர்களுக்கு அதற்கான சம்பளம் கிடையாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் கிடையாது எனவும் கிரிஜா வைத்தியநாதன் அறிவித்துள்ளார். நாளை காலை 10.15 மணிக்குள்ளாக பணிக்கு வரும் அரசு ஊழியர்கள் தொடர்பான தகவல்களை தலைமைச் செயலகத்தில் உள்ள பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.