போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டம் 1976, விளக்கவுரை புத்தக வெளியீடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த புத்தகத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பையா வெளியிட அதை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பிரிட்டிஷ் துணை தூதர் ஜெர்மி பில்மோர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பிப்ரவரி 9ம் தேதி கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு தினமாக அறிவிக்க வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கை முதல்வரிடம் கொண்டு செல்லப்படும் என தெரிவித்தார். பாலியல் குற்றம் தொடர்பான போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது என்றும், மத்திய அரசு சொல்வதற்கு முன்பாக தமிழக அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கும் என்றும் கூறினார்.
போக்சோ சட்ட வழக்குகளை விசாரிக்க சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.