ஆசிய தடகள போட்டியில் பரிசு வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோருக்கு ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவ் ஆகியோருக்கு முறையே 10 லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ் ஆகியோரை பாராட்டி கடந்த 23 மற்றும் 24 தேதிகளில் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச அளவில் பதக்கம் வெல்பவர்களுக்கு தமிழக அரசு, அவ்வப்போது ஊக்கத்தொகை அறிவித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இதன் அடிப்படையில் கோமதி மாரிமுத்து, ஆரோக்கிய ராஜீவிற்கு தற்போது ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் மேன்மேலும் பல போட்டிகளில் கலந்துகொண்டு, வெற்றிகள் பெற அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்துதரும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று இந்த ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.