மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகை ஒரு லட்சத்து 67 ஆயிரம் மீனவ குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திடும் வகையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலும், மேற்கு கடற்பகுதியில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையிலும் 61 நாட்களுக்கு மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுகிறது.
இந்த தடைகாலத்தின்போது 13 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண தொகை வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நிவாரண தொகை 5 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மொத்தம் 83 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post