விவசாயி மகளான கோமதி மாரிமுத்து தடகள பயிற்சியை தாமதமாக தொடங்கினாலும், மனவலிமை முக்கியம் என்பதை வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் இந்திய மாலுமிகள் நல அமைப்பு சார்பாக ஆசிய தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து மற்றும் திறமையானவர்களை கௌரவப்படுத்தும் விதமாக பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆளுநர், கடும் சிரமத்திற்கு இடையே கோமதி மாரிமுத்து தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார். ஒருவர் தன் மீது நம்பிக்கை வைத்தால் அனைத்து தடைகளையும் வெல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக அவர் உள்ளதாக ஆளுநர் பெருமிதம் தெரிவித்தார்.