தமிழக கல்வித்துறை இந்தியாவிற்கே முன்மாதிரியாக உள்ளது: செங்கோட்டையன்

உயர் கல்வித்துறையில் தமிழகம் 48.9 சதவிகிதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று காலை சாமி தரிசனம் செய்த அமைச்சர் செங்கோட்டையன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்தியாவிற்கே தமிழக கல்வித்துறை முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் உள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இதற்கு பள்ளிக் கல்வித்துறையில் கொண்டு வரப்பட்ட மாற்றம்தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

வரும் கல்வியாண்டில் புதிய திட்டமாக 9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் இணைய நூலகம் உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.

கல்வித்துறைக்கு பிரத்யேக தனிச்சேனல் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.

Exit mobile version