2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 34 ஆயிரத்து 181 கோடியே 73 லட்சம் ரூபாயை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கான புத்தகப் பைகள், பள்ளிச்சீருடைகள் உள்ளிட்ட படிப்புக்கு தேவையான பொருட்களை விலையின்றி வழங்குவதற்காக ஆயிரத்து 18 கோடியே 39 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மடிக்கணினி திட்டத்திற்கு 966 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர் தொழிநுட்ப ஆய்வகங்கள் அமைக்க 520 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2020-21ம் நிதியறிக்கையில் பள்ளிகல்வித்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழகம் கல்வியில் முதன்மை மாநிலமாக வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.