நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.18,540 கோடி நிதி ஒதுக்கீடு

2020-21ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18ஆயிரத்து 540.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், சீரான வருவாயினங்களின் அடிப்படையில் நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பயன்படுத்தும் விதமாக கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படும். திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்காக 2020-21ம் நிதியாண்டில் ஆயிரத்து 650 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்காகவும் ஆயிரத்து 450 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் 8 ஆயிரத்து 155 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்புற முதலீட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 6 மாவட்டங்கள் மற்றும் 2 தாலுகாகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டத்திற்காக 406 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா உணவக திட்டத்திற்காக 2020-21ம் நிதியாண்டில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மற்றும், விழுப்புரம் மாவட்டங்களில் 3 ஆயிரத்து 41 கோடி ரூபாய் மொத்த செலவில் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

நெம்மேலியில் கட்டப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு 2020-21ம் நிதியாண்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version