தி.மு.க தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்த நாள் இன்று

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசை, குறுக்கு வழியில் கலைக்க நினைத்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையின் மாண்பைக் குலைத்து, சட்டையைக்  கிழித்துக் கொண்டு சாலையில் நின்ற நாள் இன்று…

அ.தி.மு.க நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் மறைந்தபோது, கழகம் என்னென்ன சோதனைகளைச் சந்தித்ததோ… அதே போன்ற சோதனைகளை 2017-ஆம் ஆண்டு தொடக்கத்திலும் சந்திக்க நேரிட்டது.

2016 டிசம்பர் 5-ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்ததும், அவரால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு குடும்பம், மீண்டும் கட்சிக்குள் நுழையத் திட்டமிட்டது. ஆட்சியைக் கைப்பற்றி அதிகாரம் செய்யவும், அ.தி.மு.க-விற்குள் ஆதிக்கம் செலுத்தவும் தலைப்பட்டது. அதையடுத்து, கழகத்திற்குள், அதிருப்தி அணிகள் உருவாயின.

அவை ஒவ்வொன்றும் ஆளுக்கொரு திசையில் நின்று அ.தி.மு.க-வையே எதிர்த்தன. எம்.ஜி.ஆர் கண்ட இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும் சூழல் உருவானது. இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற உடனே, சட்டப்பேரவையில் ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் அக்னிப் பரீட்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று, வாக்குகள் வாங்கி, சீட்டுக்கள் ஜெயித்து, ஜனநாயக முறையில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாத தி.மு.க, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எப்படியாவது அ.தி.மு.க-வின் ஆட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது. அதற்கான ஜனநாயக மாண்புகளை குழிதோண்டிப் புதைக்கும் சதித் திட்டங்களோடு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் நாளுக்காக தி.மு.க-வும் காத்திருந்தது.

2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி சட்டப்பேரவை கூடியதும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாசித்தார். அதையடுத்து, தி.மு.க தன் தில்லுமுல்லு வேலைகளைத் தொடங்கியது. சபாநாயகரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த விடாமல், அவைக்குள் அமளி செய்யத் தொடங்கியது. முன்னுக்குப் பின் முரணாக பேசி குழப்பம் ஏற்படுத்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் முயன்றனர்.

கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு என்ற கொள்கைவழி வந்த, அ.தி.மு.க அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்ணியம் காத்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாத தி.மு.க-வினர் ஒரு கட்டத்தில், கும்பலாகத் திரண்டு, சபாநாயகர் மேஜையை முற்றுகையிட்டனர். சபாநாயகரை தாக்கும் நோக்கத்தில் அவரது மேஜையை தள்ளிவிட்டனர். சபாநாயகரின் கைகளைப் பிடித்து இழுத்து கீழே தள்ள முயன்றனர். சபாநாயகரின் மைக் உடைக்கப்பட்டது. உறுப்பினர்களின் இருக்கைகள் சேதப்படுத்தப்பட்டன.  தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் அராஜகத்தை அடுத்து, அவை இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது.

தனிப்பட்ட முறையில் சபாநாயகர் அறைக்குச் சென்று மன்னிப்புக் கேட்பதுபோல், நாடகமாடிய மு.க.ஸ்டாலின், மீண்டும் அவைக்கு வந்ததும், முன்னைவிட உக்கிரமாக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்.

அவை மரபுகளை மீறி தொடர்ந்து செயல்பட்ட தி.மு.க-வினரை, மொத்தமாக வெளியேற்ற சபாநாயகர் தனபால் அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, தி.மு.க-வினர் அனைவரும் சபை விதிகளுக்குட்பட்டு அமைதியான முறையில் வெளியேற்றப்பட்டனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு அமைதியாக நடைபெற்றது. 122 எம்.எல்.ஏ-க்களின் அமோக ஆதரவுடன் அசைக்க முடியாத முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார்.

ஆனால், வெளியேற்றப்பட்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தை கருணாநிதியிடம் கற்றுக் கொண்ட நாடகங்களில் ஒன்றை அரங்கேற்றினார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் எதிர்கட்சித் தலைவர் அறையில் சென்று அமர்ந்தனர். அங்கு ஸ்டாலின் நடத்தப்போகும் நாடகத்துக்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. கத்தரிக்கோல் ஒன்றை வாங்கி வந்து, ஸ்டாலினின் சட்டையை தி.மு.க-வினரே வெட்டினர். அந்தச் சட்டையில் நன்றாக இருந்த பட்டன்களையும் தி.மு.க-வினரே அறுத்தனர்.

அதன்பின் கத்தரிக்கப்பட்ட சட்டையுடன், பட்டன்களை அவிழ்த்துவிட்ட நிலையில், சட்டசபையில் இருந்து நேராக ரோட்டுக்கு வந்த மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர்களுக்கு அலங்கோல தோற்றத்துடன் போஸ் கொடுத்தார். ஒத்திகை பார்த்த நாடகத்தை கிழிந்த சட்டையுடன் ரோட்டில் அரங்கேற்றம் செய்து காட்டினார். ஆளுநரிடம் சென்று முறையிட்டார். மெரினா கடற்கரையின், காந்தி சிலை அருகில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக, அரை மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால், ஆட்சி கலைய வேண்டும்… தேர்தல் மீண்டும் நடக்க வேண்டும்… அதில் எப்படியாவது வெற்றி பெற்று முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்று துடித்த ஸ்டாலினின் நாடகங்களை தமிழக மக்கள் ரசிக்கவில்லை. ஆளுநர் மதிக்கவில்லை. நீதிமன்றம் நம்பவில்லை.

2017-ல் அ.தி.மு.க-வை நோக்கி வந்த அத்தனை சோதனைகளையும் அடித்து நொறுக்கி, கட்சியைக் காப்பற்றி, ஆட்சியை திறம்பட நடத்தி, இன்று மக்களின் மனதில் எளிமையான முதலமைச்சராக இடம் பிடித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஜனநாயக மாண்புகளை குலைத்து, சட்டப்பேரவையின் கண்ணியத்தை புதைத்து, குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைத்த மு.க.ஸ்டாலின், முன்பைவிட இன்று மக்களிடம் இருந்து அந்நியமாகி நிற்கிறார்.

Exit mobile version