திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருக்கோயில் தை மாத பிரம்மோற்சவம் கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நாள்தோறும் இருவேளைகளில் உற்சவர் வெவ்வேறு வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் 7ஆம் நாளான இன்று தேரோட்ட நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேதராய் உற்சவர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாளித்தார். இத்தேர் நான்கு மாட வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் தேரடியில் நிலை நிறுத்தப்பட்டது. அப்போது வீரராகவ பெருமாள், நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.