நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் திருப்பூர் மாவட்ட அணியும் பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அணியும் வெற்றி பெற்றன.
நாமக்கல் மாவட்ட அமெச்சூர் கபடிக் குழு, தைப்பொங்கல் விழாக் குழு, திருச்செங்கோடு ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய இந்தக் கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் 30 அணிகளும் பெண்கள் பிரிவில் 25 அணிகளும் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் திருப்பூர் மற்றும் தூத்துக்குடி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 30-26 என்ற புள்ளி கணக்கில் திருப்பூர் அணி வெற்றி பெற்றது.
பெண்களுக்கான இறுதிப் போட்டியில் ஈரோடு பெண்கள் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. இப்போட்டிகளில் இருந்து தேசிய அளவிலான கபடி போட்டியில் விளையாடுவதற்காக 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தேர்வு செய்யப்படும் 12 பேர் கொண்ட அணி, இம்மாதம் 28 முதல் 31-ஆம் தேதிவரை நடக்கவுள்ள தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க உள்ளது.