தமிழகத்தின் புதிய மாவட்டங்களாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை இன்று உதயம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைக்கிறார்.

சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்றாகப் பிரிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் இன்று தொடக்கி வைக்கிறார். இதற்காக தொடக்க விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத் தொடக்க விழா தொன்போஸ்கோ நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டத் தொடக்க விழா ராணிப்பேட்டையில் கால்நடை நோய்த் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு, துணை முதல்மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, தமிழகத்தின் 35-ஆவது மாவட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தையும், 36-ஆவது மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தையும் தொடக்கி வைத்துப் பேசுகிறார். தொடர்ந்து, புதிய திட்டங்கள் மற்றும் அடிக்கல் நாட்டும் பணிகளைத் தொடக்கி வைத்து, 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 184 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்க உள்ளார். இதனால் அப்பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

Exit mobile version