திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவூலத்தில் உள்ள நகைகள் வரும் செப்டம்பரில் சரிப்பார்க்கப்படும்

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவூலத்தில் உள்ள நகைகள் வரும் செப்டம்பரில் சரிப்பார்க்கப்படும் என தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவில் கருவூலத்திலிருந்து கடந்த ஆண்டு 7 லட்சத்து 36 ஆயிரத்து 376 ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் மாயமானது. இதற்கு பொறுப்பாளராக இருந்த தேவஸ்தான கரூவூல இணை செயல் அதிகாரி சீனிவாசராவ் ஊதியத்திலிருந்து மாதம் 25ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து தேவஸ்தான தலைமை செயல் அலுவலர்
அனில்குமார் சிங்கால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நகைகள் மாயமானது குறித்து விசாரணை மேற்கொண்ட போது, 2013முதல் 2016வரை பணியாற்றிய செயல் அலுவலர் சீனிவாசராவ் பணி மாற்றத்தை தொடர்ந்து நகைகள் ஒப்படைக்கும் போது தவறு நடந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார். அவர் கவனக்குறைவாக செயல்பட்டதை கண்டிக்கும் விதமாக சம்பளத்திலிருந்து மாதம் 25 ஆயிரம் ரூபாய் பிடித்தம் செய்யப்படுவதாக அனில் குமார் தெரிவித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் மாதம் கருவூலத்தில் உள்ள நகைகள் முழுவதும் மீண்டும் சரிபார்க்கப்படும் என்றும், அப்போது சம்பந்தப்பட்ட நகைகள் கிடைக்கவில்லை எனில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version