உளுந்தூர்பேட்டையில் வெங்கடேஸ்வர கோயிலுக்கான திருப்பணிகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உளுந்தூர்பேட்டையில் அமைக்கப்படவுள்ள வெங்கடேஸ்வர கோயிலுக்கான திருப்பணிகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அம்மா திடலில், நான்கு ஏக்கர் பரப்பளவில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருக்கோயில் கட்டப்பட உள்ளது. இதன் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திருப்பதி தேவஸ்தான போர்டு குழு தலைவர் சுப்பா ரெட்டி வரவேற்றார். தொடர்ந்து, முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து, சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை முதலமைச்சர் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கோயில் விழா கல்வெட்டையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version