நெல்லையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக தென்காசியை முதலமைச்சர் துவக்கி வைத்தார்

நெல்லையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமான தென்காசி மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசியை தனி மாவட்டமாக பிரித்து தமிழக முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்தார். இந்த அறிவிப்பு தென்காசி பகுதி மக்கள் அனைவரிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மாவட்டத்திற்கான எல்லை வரையறை தீவிரமாக நடந்ததையடுத்து, மாவட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தென்காசியின் பாரம்பரியத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கண்காட்சியை பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில் பாரம்பரியம் மிக்க பல்வேறு பொருட்கள் மற்றும் கலைநயத்திடன் உருவாக்கப்பட்டிருந்த பொருட்களும் இடம்பெற்றிருந்தன. பின்னர், காவல்துறையின் மரியாதையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டார்.

விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படத்திற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், தமிழகத்தின் 33வது புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெகிழிக்கு தடை அறிவித்து இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது எனவும், சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மூலம் பெறப்பட்ட மனுக்களில், 5 லட்சத்திற்கும் அதிகமாக கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.

Exit mobile version