காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ரூபாய் 4 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைந்துள்ள சியட் நிறுவன தொழிற்சாலையின் டயர் உற்பத்தியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று துவக்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலமாகவும், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் மூலமாகவும் பல தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் தொழில் துறைக்கும், சியட் நிறுவனத்திற்கும் இடையே கடந்த 2018ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மதுர மங்கலம் கிராமத்தில், சியட் நிறுவனத்தின் டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து 10 ஆண்டு காலத்திற்குள் 4 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்து ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த தொழிற்சாலையின் உற்பத்தியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், சியட் நிறுவன அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.