மறைந்த முதலமைச்சரும், புரட்சித் தலைவருமான எம்ஜிஆர் மற்றும் சரோஜா தேவி நடித்துள்ள ‘அன்பே வா திரைப்படம், டிஜிட்டல் ஒலி-ஒளியுடன் நவீன தொழில்நுட்பத்தில் தமிழக முழுவதும் உள்ள 200 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
நடிப்பாலும், அரசியலாலும் மக்களின் மனதை கொள்ளை கொண்டவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம். அதுவும் ஏ.சி திருலோகசந்தர் இயக்கத்தில் 1966-ஆம் ஆண்டு வெளிவந்த அன்பே வா திரைப்படம் அனைவராலும் மறக்க முடியாத திரைப்படமாகவே இன்றளவும் இருக்கின்றது. ஏ.வி.எம் நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம் இதுவாகும்.
காலத்தை தாண்டியும் ரசிகர்கள் மனதில் வாழக்கூடிய இப்படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதில் வரும் ஒவ்வொரு பாடல்களுமே இப்பொழுதும் கேட்டாலும் இனிக்கதான் செய்யும்…
இப்படி காதல், நகைச்சுவை, என மக்களின் மனதை கொள்ளை கொண்ட அன்பே வா திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள 200- திரையரங்குகளில் நவீன தொழில்நுட்பத்துடன் வெளியாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே இத்திரைப்படம், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடத் தயாராகிவிட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகளில் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் அன்பே வா திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளன.
மதுரை, நெல்லை, ராமநாதபுரம் என பல்வேறு மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட்ட திரைப்படத்திற்கு, அந்தந்த பகுதி எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பலர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.